நானோ தொழில்நுட்பத்தில் சென்சார் கருவி - ஆராய்ச்சியில் காந்திகிராம பல்கலை
திண்டுக்கல்: விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தும்போது, ஏற்படும் அதிர்வுகளின் அளவை கண்டறியும் சென்சார் கருவியை நானோ தொழில்நுட்பத்தில் கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் காந்திகிராம பல்கலை ஈடுபட்டுள்ளது. ராக்கெட், செயற்கைகோள்களை செலுத்தும்போது, ஏவுதளத்தில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகள் அதிகமானால் ஏவுதளம் சேதம் அடையும். அதிர்வை கண்காணித்து கட்டுப்படுத்தும் முறைகளை விஞ்ஞானிகள் கையாள்வர். அதிர்வுகளின் அளவை கண்டறிய சென்சார் கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக, தற்போது இவை இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை உள்நாட்டிலே தயாரிக்க, விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது. சென்சார் கருவியை நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கும் பணி, காந்திகிராம பல்கலை இயற்பியல் துறையிடம், விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒப்படைத்துள்ளது. இதற்கு முதல் கட்டமாக 15 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இயற்பியல் துறை தலைவர் கே.ஜெயக்குமார் கூறியதாவது: இயற்பியல் துறை மூலம் 125 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளோம். இவற்றை ஆய்வுசெய்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், சென்சார் கருவி கண்டறியும் பணியை ஒப்படைத்துள்ளது. இதுபோன்ற ஆராய்ச்சியை, பல்கலைக்கு ஒப்படைப்பது இதுவே முதல்முறை. இந்த சென்சார் கருவிக்கான ஆராய்ச்சி வெற்றி அடைந்தால் நாட்டின் அன்னிய செலவாணி மிச்சமாகும்.