பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த எதிர்ப்பு
வால்பாறை: பாலியல் புகாரில் சிக்கிய தலைமை ஆசிரியரை, மீண்டும் பள்ளி பணியில் அமர்த்த ஆட்சேபித்து, போலீசாரிடம், பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், வால்பாறை, சோலையார் எஸ்டேட், அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்தவர், பள்ளி வளாகத்தில் ஆசிரியையுடன், நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகள், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஓராண்டுக்கு பின், அவர்களுக்கு அதே பள்ளியில் பணி வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. இதையறிந்த பெற்றோர், பள்ளி முன் திரண்டனர். போலீசார் விசாரணை நடத்தினார். பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களை பணிபுரிய அனுமதிக்கக்கூடாது என, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமாதானப்படுத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து, பெற்றோர் கலைந்தனர்.