மத்திய அரசு திட்ட நிதியில் முறைகேடு; பெரியார் பல்கலை மீது புகார்
சேலம்: சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில் மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்ட நிதியுதவியுடன் செயல்படும் டி.டி.யு. ஜி.கே.ஒய். மையத்தில் டிசைனிங் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.அதில் படித்த ஏழு மாணவர்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:பெரியார் பல்கலையில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் மையத்தில் 2021ல் 140 மாணவர் 60 மாணவியர் பயிற்சியில் இணைந்தோம். அதன் இயக்குனராக பதிவாளர் தங்கவேலு (பொ) ஊழியர்களாக சசிக்குமார் சாஜித் பரமேஸ்வரி உள்ளனர்.எங்களுக்கு இலவச கல்வியுடன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக உறுதி அளித்தனர். அனைவரும் பட்டியலின பழங்குடி சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். அனைத்து கல்வி சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.கடந்த 27ல் பயிற்சி முடிந்த நிலையில் சான்றிதழ்களை தர மறுக்கின்றனர். தேர்வு எழுதினால் மட்டுமே தர முடியும் என்கின்றனர். அத்துடன் வங்கி கணக்கு புத்தகம் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்டனர். மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 3000 ரூபாய் ஊக்கத்தொகையையும் எடுத்துக்கொண்டனர்.இந்த முறைகேட்டை வெளியே தெரிவித்தால் சான்றிதழ்களை தர மாட்டோம் என மிரட்டுகின்றனர். எங்களுக்கு ஒதுக்கிய நிதியில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.