செயற்கை நுண்ணறிவு இந்திய முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் - எஸ். கிருஷ்ணன்
புதுடில்லி: பல துறைகளில் பயன்படும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி கொண்டது என்றும், இது வளர்ச்சியடைந்த இந்தியா 2047 நோக்கி நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் நடைபெற்ற “வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு 2025” (ESTIC 2025) நிகழ்வில், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்த செயற்கை நுண்ணறிவு குறித்த உயர்நிலைக் குழு விவாதம் நடைபெற்றது. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், அரசு, கல்வித் துறை மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் பங்கேற்றனர்.இந்தியாவின் ஏஐ வளர்ச்சிச் சூழலை வலுப்படுத்துதல், உள்நாட்டு மொழி அடிப்படையிலான ஏஐ மாதிரிகளை உருவாக்குதல், நெறிமுறை நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. வரவிருக்கும் “இந்தியா-ஏஐ தாக்க உச்சிமாநாடு 2026”க்கு இது துவக்கமாக அமைந்தது.அமர்வைத் தொடங்கி வைத்துப் பேசிய எஸ். கிருஷ்ணன், “செயற்கை நுண்ணறிவு போன்ற பலதுறை தொழில்நுட்பங்கள் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதமாக இந்தியாவை 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற முக்கிய பங்கை வகிக்கும்,” எனக் கூறினார்.