உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் வாயிலாக பகவத் கீதை கற்பித்தால் மாணவர்கள் வாழ்வில் சிறந்து விளங்குவர்

சென்னை: “பகவத் கீதையை எளிமைப்படுத்தி டிஜிட்டல், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தால் அவர்கள் வாழ்வில் சிறந்து விளங்குவர்,” என, 'ரதம் ஹெரிடேஜ்' அமைப்பின் நிறுவனரும், கட்டடக்கலை நிபுணருமான மதுசூதனன் கலைச்செல்வன் தெரிவித்தார்.சென்னை, தி.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் மேல்நிலைப் பள்ளியில், 'கீதாம்ருதம் மஹத்' எனும் தலைப்பில், வாழ்வின் அமுதம் பகவத் கீதை என்பதை விவரிக்கும் இரண்டு நாள் கண்காட்சி, நேற்று துவங்கியது.மாணவ, மாணவியர், பகவத் கீதையை மையமாக வைத்து, யோகா, விளையாட்டு, மனநலம், கணிதம் உள்ளிட்ட பல தலைப்புகளில், செயல் விளக்கங்களுடன் தங்கள் படைப்புகளை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மதுசூதனன் கலைச்செல்வன் பேசியதாவது:பகவத் கீதை மத ரீதியான நுால் என்பதைவிட, வாழ்வியல் கையேடு என்பதே சிறந்தது. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை இந்திய பாரம்பரியத்தின் மிகப்பெரிய அறிவுசார் சொத்து.வாழ்க்கை கல்விக்கு அடிப்படையான ஏராளமான விஷயங்கள் இதில் பொதிந்துள்ளன. பகவத் கீதையை எளிமைப்படுத்தி டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவை வாயிலாக, பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தால் அவர்கள் வாழ்வில் சிறந்து விளங்குவர்.முன்பைவிட தற்போது உள்ள மாணவர்களிடத்தில், பயம், போட்டி, மனக்குழப்பம் போன்றவை பெருகியுள்ளன. அவர்களுக்கு பகவத் கீதை நிச்சயம் துணையாக இருக்கும்.ஆசிரியர்கள் கற்பிக்கும்போதே, பாடத்திற்கு தகுந்தாற்போல், அதை சார்ந்து ஒரு பகவத் கீதை ஸ்லோகம் அல்லது கதையை கற்றுத்தர வேண்டும். அவ்வாறு செய்வது, மதிப்பு அடிப்படையிலான கல்விக்கு வழிவகுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.புராணக்கதைகளை அடிப்படையாக வைத்து வாழ்வியல் நெறிகளை கலை நிகழ்ச்சியாக, மாணவ, மாணவியர் வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்