உள்ளூர் செய்திகள்

வணிக வளாகமாக மாறிய பள்ளி கட்டடம்: அமைச்சர்களுக்கு கோர்ட் உத்தரவு

கோவை: பள்ளிக் கட்டடத்தை வணிக வளாகமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என, பொதுமக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர்கள் ஸ்டாலின், தங்கம் தென்னரசு உட்பட ஆறு பேர் கோவை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. கோவை, தேவாங்கபேட்டையைச் சேர்ந்த நாச்சிமுத்து செட்டியார், சோமசுந்தரம் செட்டியார் ஆகியோர்  தங்களுக்கு சொந்தமான இடத்தை, பள்ளி அமைக்க, 1969ல் மாநகராட்சிக்கு தானமாக வழங்கினர். இந்த இடத்தில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி துவங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம், சத்துணவுக் கூடம் இயங்கின. இந்நிலையில், பழுதடைந்த பள்ளி கட்டடத்தை இடித்து, புது கட்டடம் கட்ட  2006-07ல் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதாக காரணம் காட்டி,  இக்கட்டடத்தை வணிக வளாகமாக மாற்ற, மாநகராட்சி மற்றும் கல்விக்குழு முடிவு செய்தது. தகவல் அறிந்த பொதுமக்கள், இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். எனினும், இவ்வளாகத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டு, கடைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன; பள்ளியும் தற்போது செயல்படவில்லை. அதிருப்தி அடைந்த தேவாங்கப் பேட்டை மக்கள், ‘பள்ளி வளாகத்தை, தொடர்ந்து கல்விப்பணிக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்; வணிக வளாகமாக மாற்ற தடை விதிக்க வேண்டும்’ எனக்கோரி, கோவை மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர், மேற்கு பகுதி தாசில்தார், மாநகராட்சி கல்விக்குழு தலைவர், கலெக்டர், உள்ளாட்சித்துறை அமைச்சர்  ஸ்டாலின், கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மனுவை விசாரித்த கோர்ட், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, இம்மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள் ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கலெக்டர் உட்பட ஆறு பேரும் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்