உள்ளூர் செய்திகள்

மடிக்கணினி வழங்கும் விழாவில் மல்லுக்கட்டு: வெயிலில் வாடிய பள்ளி மாணவிகள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பள்ளியில் மடிக்கணினி(லேப்-டாப்) வழங்கும் விழாவில் கோயில் தக்காருடன் அ.தி.மு.க., நகர் செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நீண்டநேரம் வெயிலில் அமர வைக்கப்பட்ட மாணவிகள் பரிதவித்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் கீழ் இயங்கும் பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று அரசின் விலையில்லா லேப்-டாப், சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுனன், துணைத் தலைவர் குணசேகரன், கோயில் அதிகாரிகள் பங்கேற்றனர்.  நகராட்சி பிரதிநிதிகள், கோயில் அதிகாரிகள் உட்பட பலர் ஒரு மணி நேரம் வரை பேசினர். வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் மாணவிகள் அவதிப்பட்டனர். திடீர் வாக்குவாதம் இதை கண்ட கோயில் தக்கார் குமரன் சேதுபதி, "மாணவிகள் வெகு நேரம் வெயிலில் அமர்ந்துள்ளனர். உடனே லேப்-டாப் வழங்கிவிடலாம்" என்றார். அப்போது அ.தி.மு.க. நகர் செயலாளர் பெருமாள், "நான் பேச வேண்டாமா" எனக்கூறி காலை 11.30 - 11.40 மணி வரை பேசினார். பேசி முடித்ததும் "இவ்வளவு நேரமா பேசுவது; மாணவிகள் வெகுநேரம் காத்திருக்கின்றனர்" என தக்கார் கூறியதும், கோபமடைந்த நகர் செயலாளர் மற்றும் அ.தி.மு.க.,வினர் தக்காருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருமையில் பேசிக் கொண்டனர். இருவரையும் கோயில் அதிகாரிகள், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் சமரசம் செய்தனர். மதியம் 12 மணிக்கு லேப்-டாப்கள் வழங்கப்பட்டன. அ.தி.மு.க. நகர் செயலாளர் பெருமாள் கூறியதாவது: என்னையும், நகராட்சி துணைத் தலைவரையும் பேச வேண்டாம் என கோயில் தக்கார் எதிர்ப்பு தெரிவித்தார். கோயில் இணை கமிஷனர் அனுமதியுடன் பேசினேன். முதல்வர் படம் வெளியில் தெரியாத வகையில் லேப்-டாப் மேல் உள்ள அட்டையை அகற்றாமல் தக்கார் கொடுக்க சொன்னதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தவுடன் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றார். தக்கார் குமரன் சேதுபதி கூறியதாவது: குழந்தைகள் வெகு நேரம் வெயிலில் அமர்ந்து இருந்ததால் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பேசி முடித்ததும் லேப்-டாப் கொடுத்து விடலாம் என்றேன். ஆனால் நகர் செயலாளர் அதிக நேரம் பேசினார். அப்போது பேச்சை குறைத்திருக்கலாமே என்றதும், என்னுடன் வாக்குவாதம் செய்தார். நான் முதல்வர் படத்தை மறைத்து கொடுக்க சொன்னதாக கூறுவது அப்பட்டமான பொய், வேண்டுமானால் கோயில் அதிகாரி, நகராட்சி தலைவர், பள்ளி ஆசிரியரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றார். தேவை நடவடிக்கை அரசு விழாவில் அரசியல் கட்சி நிர்வாகிகள் அமரவோ, பேசவோ கூடாது என விதி இருந்தும், இதுபோன்று அரசு விழாக்களில் ஆளும் கட்சியினர் மேடையை ஆக்கிரமித்து பலமணி நேரம் பேசி பொதுமக்கள், மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதை தவிர்க்க கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்