தமிழகத்தில் முதன்முறையாக வேட்டைத் தடுப்புக் குழுவில் கல்லுாரி மாணவர்கள்
உசிலம்பட்டி: தமிழகத்தில் முதன்முறையாக வனத்துறை மூலம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி மாணவர்கள், வேட்டைத் தடுப்புக் குழுவில் இணைந்து செயல்படுகின்றனர். கல்லுாரியின் இயற்கைவள பாதுகாப்பு மன்றம் சார்பில் 18 மாணவர்கள், வேட்டைத் தடுப்புக் குழுவில் சேர்ந்துள்ளனர். இதற்கு மதுரை மாவட்ட வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாணவர்கள் மதன், வினோத்குமார், விஜய், சசிகுமார், பாலாஜி, சுந்தரபாண்டியன் கூறியதாவது: வனவிலங்குகளை கணக்கெடுப்பது, யானை, புலிகளை தனித்தனியாக கணக்கெடுப்பது போன்ற பணிகளில் வனக் காவலர்களுடன் சேர்ந்து பணியாற்றினோம். பச்சைக்கிளிகள், மயில், மண்ணுளிபாம்பு போன்ற உயிரினங்களை கைப்பற்றுவதும் தவறு. உசிலம்பட்டி பகுதி கிணறுகளில் விழுந்த மயில், மான், காட்டுப்பன்றிகளை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தோம். வீடுகளுக்குள் உடும்பு, எறும்புத்தின்னிகள் சாதாரணமாக வந்து செல்லும். இவற்றை துன்புறுத்தாமல் மீண்டும் காட்டில் விட வேண்டும். நுாற்றுக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளோம். இதில் 40 சதவீதம் வரை நாகப்பாம்பு, கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்தவை. கட்டுவிரியன் பாம்புகள் இரவில் வேட்டையாடுவதால், இதுவரை இரண்டு முறைதான் அவற்றைப் பிடித்துள்ளோம். பச்சை பாம்பையும் பிடித்துள்ளோம். இதுதவிர 55 ஏக்கர் பரப்பளவில் உள்ள எங்கள் கல்லுாரியில், பாம்புகளின் நடமாட்டத்தை இரவில் கண்காணிக்கிறோம். இரண்டு குழுவாக பிரிந்து இரவு 9.30 மணி முதல் 12 மணி வரையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரையும் பிரிந்தும் செயல்படுகிறோம். நடைபாதை ஓரங்கள், நீர்வழித் தடங்களைக் கவனித்தால் பாம்புகள் சென்றதை பார்க்க முடியும். இதுவரை ஏழுவகை இனங்களை பார்த்துவிட்டோம். பாம்புகள் மட்டுமின்றி ஆந்தை, வவ்வால்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்கிறோம். வன உயிரினங்களைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொண்டால்தான், சுற்றுச்சூழல் குறித்த உண்மையான விழிப்புணர்வு பெற முடியும் என்றனர்.