உள்ளூர் செய்திகள்

சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் புதிய ஆங்கில பயிற்சி மையம் திறப்பு

புதிய கல்விமையத்தை இன்று (நவ., 12ம் தேதி) தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்து பேசுகையில், “தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி இடைநின்றல் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த  2002ம் ஆண்டு 12 சதவீதமாக இருந்த உயர்கல்வி வகுப்புகளுக்கான மாணவர்களின் இடைநின்றல் தற்போது 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதும் திறன் பெற்றிருந்தாலும், அவர்களால் சரளமாக பேச முடியாத நிலை உள்ளது. இதற்கு தன்னம்பிக்கை குறைந்திருப்பதே முக்கிய காரணம். அரசுப் பள்ளி மாணவ, மாணவியரும் ஆங்கிலத்தில் பேசி அசத்தும் வகையில், பிரிட்டிஷ் கவுன்சில் தமிழக அரசுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளித்து வருகிறது. எஸ்.எஸ்.ஏ., ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முதலில் ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டு, பிறகு ஆசிரியர்களுக்கும், அதன்வாயிலாக கிராமப்புற ஏழை மாணவ, மாணவியரும் பயன் பெறுவர். தமிழக இளைஞர்கள் ஆங்கில புலமை பெற ஏதுவாக இந்த புதிய கல்வி மையத்தை அமைத்துள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். திறப்பு விழாவில், பிரிட்டிஷ் கவுன்சில் துணை இயக்குனர் ரோப் லைனெஸ், பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியாவுக்கான அமைச்சர் (கலாச்சாரம்) ரூத் ஜீ ஆகியோர் பங்கேற்று பேசினர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில பயிற்சியை துவக்கிவிட்டது. இதுவரை ஆயிரத்து 250 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி மையத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரத்து 600 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஏழு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு மேலாளர்களின்கீழ் 12 ஆசிரியர்கள் இங்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பர். இப்பயிற்சிக்கு பதிவு செய்யும் முன்பே ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டு அவர்களது ஆங்கிலத் திறன் அறியப்படுகிறது. அதன்படி, உரிய பாடத்திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் எவலூஷன், எக்ஸிக்யுட்டிவ்,  இம்பேக்ட் ஆகிய மூன்று வகையான பாடத்திட்டங்கள் உள்ளன. எவலூஷன் பிரிவில் பேசுதல், கற்றல், படித்தல், எழுதுதல் ஆகியவற்றிற்கு ஏதுவாக ஆங்கில் இலக்கணம் மற்றும் சொற்கள் கற்பிக்கப்படுகின்றன. தங்களது ஆங்கில திறனை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் பணிபுரிபவர்களுக்கு எக்ஸிக்யுட்டிவ் பிரிவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்டர்வியு, குழுவிவாதம், பொது மேடைப் பேச்சு ஆகியவற்றில் தன்னம்பிக்கை வளர்த்துக்கொண்டு திறம்பட செயல்பட இம்பேக்ட் பாடத்திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் ஏழு வாரங்களுக்கு மொத்தம் 42 மணிநேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தின்போது பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு,போன்: 044 - 4205 0600வெப்சைட்:  http://www.britishcouncil.org/india-english-learnenglishinchennai.htm


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்