ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவர் தேர்ச்சி குறைவு: ஸ்டாலின் வேதனை
சென்னை: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது என்னை மிகவும் வருந்த வைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும், என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த நான் முதல்வர் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுக்கு, 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி என்று தான் முதலில் இலக்கு நிர்ணயித்தோம். முதல் ஆண்டிலேயே, 13 லட்சம் மாணவர்களுக்கு, உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 445 பொறியியல் கல்லுாரிகளில், பயிற்சி பெற்ற, 85,053 பொறியியல் பட்டதாரிகளில், 65,034 மாணவர்கள்; 861 கலை் கல்லுாரிகளில் பயிற்சி பெற்ற, 99,230 மாணவர்களில், 83,223 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.வேலை வாய்ப்பு முகாம் வழியே, 5,844 பொறியியல் மாணவர்களுக்கும், 20,082 கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கும், வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது இத்திட்டத்தின் வெற்றி. குடிமைப்பணித் தேர்வு என சொல்லப்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த, 2016ம் ஆண்டில் இருந்து, 10 சதவீதத்திற்கு மேல் என்ற நிலையில் இருந்து, ஐந்து சதவீதமாக குறைந்து விட்டது. இது என்னை மிகவும் வருந்த வைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். நாம் தான் மாற்ற வேண்டும். அதற்காகத்தான் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிப் பிரிவு உருவாக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.