இடை நின்றவர்களை பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு
விருத்தாசலம்: கடலுார் மாவட்டத்தில், இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது.மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் துவக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வி பயின்ற மாணவர்கள் 303 பேர் இடை நின்று மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர். இவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்று கல்வி கற்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.அந்த வகையில், 6 வயது முதல் 18 வயது வரை உள்ள இடைநின்ற மாணவர்கள் வசிப்பிடங்களை அறிந்து நேரடியாக சென்று கள ஆய்வு செய்யவும், அவர்களின் பிரச்னைகளை களைந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இப்பணியில் பல துறைகள் இணைந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை, வட்டார வள மைய பயிற்றுநர்கள், காவல் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, களமிறக்கப்பட்டுள்ளனர்.இக்குழுவினர், இடைநின்ற மாணவர்கள் வசிப்பிடங்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாரம் தோறும் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அந்த குழுவினர் வாரந்தோறும் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து, அதிகாரிகள் குழுவினர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களின் வீடுகளுக்கே சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், விருத்தாசலம் அடுத்த கோ. ஆதனுார் பள்ளியில் படிக்கும் 15 மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில், அவர்களின் வீடுகளை அதிகாரிகள் தேடி பிடித்து மாணவர்கள் பள்ளிக்கு வராததற்கான விவரங்களை கேட்டறிந்து நிவர்த்திக்கான நடவடிக்கை எடுத்தனர்.அதன்பேரில், அப்பகுதியில் இடைநின்ற 5 மாணவர்களுக்கு சீருடை வழங்கினர். வீடு வசதி இல்லாத ஏழை மாணவ, மாணவிகள் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.அப்போது, இடைநின்ற மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என, பெற்றோரிடம், அறிவுரை வழங்கி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். இப்படியாக மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் குழுவினர், மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.