ஹிந்து மதத்துக்கு எதிராக உறுதிமொழி: சத்தீஸ்கரில் தலைமை ஆசிரியர் கைது
பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் ஹிந்து கடவுள்களுக்கு எதிராக கிராம மக்களை உறுதிமொழி எடுக்கச் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பராரி கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக ரத்தலால் சரோவர், 60, பணிபுரிந்து வருகிறார். கடந்த 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது, அங்குள்ள மொஹத்ராய் கிராம மக்களை ஒன்று திரட்டி, சிவன், ராமர், கிருஷ்ணர் உள்ளிட்ட ஹிந்து கடவுள்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கச் சொல்லி வலியுறுத்தினார்.அதேசமயம், புத்த மதம் குறித்த பிரசாரத்தில் அவர் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து, ரத்தலால் மீது ரூபேஷ் சுக்லா என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதில், அவரின் செய்கையால் சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகள் புண்பட்டுள்ளதால், ரத்தலால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இது தொடர்பான விசாரணையில், ரத்தலால் மீதான குற்றம் உறுதியானதை அடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர் மீது மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு எதிரான செயலில் ஈடுபட்டது உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ரத்தலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.