உள்ளூர் செய்திகள்

செனட் கூட்டம் நடத்துவதில் தாமதம் அரசுக்கு பேராசிரியர்கள் அவசர கடிதம்

சென்னை: சென்னை பல்கலையின் நிதிநிலையை ஆலோசிக்க, செனட் கூட்டத்தை தள்ளி வைக்காமல், விரைந்து நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு, பல்கலை செனட் உறுப்பினர்களான பேராசிரியர்கள் அவசர கடிதம் அனுப்பியுள்ளனர்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:சென்னை பல்கலையின் ஒவ்வொரு நிதியாண்டு செயல்பாடுகள் மற்றும் வரும் நிதி ஆண்டுக்கான செலவுகள், திட்டங்கள் குறித்து முடிவு செய்ய, செனட் கூட்டம் நடத்தப்படும். பிப்ரவரி மற்றும் ஆகஸ்டில் இந்த கூட்டம் வழக்கமாக நடக்கும்.நடப்பு கல்வி ஆண்டில், பிப்ரவரியில் நடக்க வேண்டிய கூட்டம், துணைவேந்தர் இல்லாததால் அமைக்கப்பட்டுள்ள 'கன்வீனர்' கமிட்டி என்ற தற்காலிக நிர்வாக கமிட்டி மற்றும் சிண்டிகேட் துணை குழு ஒப்புதலுடன் கூட்டப்பட வேண்டும்.இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் நடத்த வேண்டிய கூட்டத்தை மார்ச்சில் நடத்தலாம் என, சிண்டிகேட் துணை கமிட்டி தள்ளி வைத்தது. பின், மார்ச்சிலும் நடத்தவில்லை. இந்நிலையில், புதிய நிதி ஆண்டும் துவங்கி விட்டது. புதிய கல்வி ஆண்டு பணிகளும் துவங்கி விட்டன.எனவே, புதிய கல்வி ஆண்டு, நிதி ஆண்டு பணிகளை மேற்கொள்ள, நிதி ஒதுக்கீடு மேற்கொள்வது குறித்து, செனட் கூட்டம் நடத்தி விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டியுள்ளது.மேலும், சென்னை பல்கலையின் நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில், வருமான வரி பாக்கி உள்ளதால், பல்கலையின் வங்கி கணக்குகளை சில மாதங்களுக்கு முன், வருமான வரித்துறை முடக்கி, பின் தற்காலிகமாக விடுவித்தது.எனவே, நிதி பற்றாக்குறை, நிர்வாக சிக்கல், நிதி நெருக்கடி போன்றவற்றை தீர்க்கும் வழிகளை காணவும், புதிய கல்வி ஆண்டு பணிகளை திட்டமிடவும், செனட் கூட்டத்தை தாமதமின்றி கூட்ட, தமிழக உயர்கல்வித்துறை, கன்வீனர் கமிட்டி ஒருங்கிணைப்பாளராக உள்ள உயர்கல்வித்துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்