பல்கலைக்கு விண்ணப்பித்த மாணவர்களை சேர்க்க தனியார் கல்லுாரிகளுக்கு இடையே போட்டி
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதால் அங்கு விண்ணப்பித்த மாணவர்களை இழுப்பதில் தனியார் கல்லுாரிகளுக்குள் போட்டி நிலவுகிறது.இப்பல்கலையில் இரண்டு ஆண்டுகளாக நேரடி யு.ஜி., படிப்புகள் நடத்தப்பட்டன. வருவாய் குறைவு, கட்டமைப்புகள் இல்லாதது, பல்கலை நிதிநிலைமையை கருத்தில் கொண்டு இந்தாண்டு முதல் யு.ஜி., மாணவர் சேர்க்கையை பல்கலை ரத்து செய்தது. ஆனால் ரத்து செய்வதற்கு முன் முறையாக யு.ஜி., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதில் பி.எஸ்.சி., கணிதம் 90, உளவியல் 186, கம்ப்யூட்டர் சயின்ஸ் 489, பி.ஏ., தமிழ் 175, ஆங்கிலம் 94, பி.காம்., 592, பி.வோக் 16 என 7 படிப்புகளுக்கு 1642 மாணவர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ரத்து நடவடிக்கை ஜூன் கடைசியில் எடுக்கப்பட்டதால் இவர்களின் சேர்க்கை கேள்விக்குறியாகியது.அதேநேரம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்கலை கல்லுாரியில் இவர்களை சேர்க்க பல்கலை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அங்கு சில பாடப்பிரிவுகள் இல்லை. மேலும் 100 முதல் 150 பேர் வரையே சேர்க்க முடியும். அதற்கு மேல் இடவசதி இல்லை என சர்ச்சை எழுந்தது.பிற கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கிய நிலையில் பல்கலையை நம்பி விண்ணப்பித்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையறிந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லுாரி, பல்கலைக்கு எழுதிய கடிதத்தில் பி.காம்., பி.எஸ்.சி., பி.ஏ., போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவிகளுக்கு அட்மிஷன் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ஒருவர் அனுமதியுடன் அக்கல்லுாரிக்கு தேவைப்படும் எண்ணிக்கையில் மாணவிகளை ஒதுக்கீடு செய்ய பல்கலை முடிவு செய்துள்ளது.ஆனால் அதற்கு மாணவிகள் தயாராக உள்ளனரா எனத் தெரியவில்லை. இதுபோல் சம்பந்தப்பட்ட பாடம் வாரியாக மாணவர்களை கேட்டு மேலும் சில தனியார் கல்லுாரிகள் பல்கலையை அணுகியுள்ளது.பேராசிரியர்கள் கூறுகையில், முன்கூட்டியே திட்டமிட்டு யு.ஜி., படிப்பு ரத்து நடவடிக்கையை பல்கலை எடுத்திருந்தால் மாணவர்கள் தங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்திருக்க முடியும். தற்போது படிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தில் தனியார் கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலையில் கட்டணம் மிகக் குறைவு. ஆனால் தனியார் கல்லுாரிகளில் கட்டணம் இரண்டு மடங்கு செலுத்த வேண்டியிருக்கும். அரசின் கீழ் உள்ள பல்கலையில் சேர விரும்பிய மாணவர்களை தனியார் கல்லுாரிகளுக்கு தாரைவார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர்.