பெண் டாக்டர் படுகொலை எதிரொலி: நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்
புதுடில்லி: கோல்கட்டாவில் பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய மருத்துவ சங்க சங்கத்தினர் அழைப்பு விடுத்த 24 மணி நேர ஸ்டிரைக் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது; புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.டாக்டர் கொலைமேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் காரணமாக, மருத்துவர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.24 மணி நேரம்தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில், இன்று காலை 6 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 18) காலை 6 மணி வரை 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் ஐ.எம்.ஏ., அறிவித்தது. விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர மற்ற எந்த மருத்துவ சேவைகளும் செயல்படாது என ஐ.எம்.ஏ., அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை போராட்டம் தொடங்கியுள்ளது.தமிழகத்திலும் போராட்டம்சென்னையில் ராஜிவ் காந்தி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதி வேண்டும். வன்முறை வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோஷம் எழுப்பினர்.பயிற்சி டாக்டர் பாரதி கூறியதாவது: ஒரு வாரத்திற்குள் மேல் ஆகியும் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24 மணி நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. நாளைக்கு இந்த சம்பவம் எந்த இடத்திலும் நடக்கலாம். இது பெண்களுக்கு நடந்த அநீதி. இது ஏன் இன்னும் சமுதாய பிரச்னையாக மாறவில்லை என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படாததால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.