விலையில்லா சீருடைகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்
சிவகங்கை: அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா சீருடைகள் வழங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.தமிழகத்தில் 2025- 26ஆம் கல்வியாண்டில் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரங்களையும், சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்களையும் பள்ளி கல்வி துறை அனைத்து பள்ளிகளிலும் சேகரித்து டி.என்.எஸ்.இ.டி., ஆப்பில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி துறையினர் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.ஆகையால் பள்ளியின் தலைமையாசிரியர்களும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரத்தை பெற்றோரிடம் கேட்டு விண்ணப்பத்தில் பெற்றோர் கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்கின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் என்னுடைய குழந்தை இப்பள்ளியில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற எங்களது சொந்தக் காரணங்களால் விருப்பம் இல்லை எனினும் விலையில்லா சீருடை பெறும் பயனாளியாக இருப்பதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.ஆனால் பள்ளிக்கல்விதுறை சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டுமே இலவச சீருடை வழங்க உள்ளதாக பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே விலையில்லா புத்தகப் பை, காலணி, வண்ண பென்சில்கள் வழங்குவதுபோல் சீருடைகளும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.