உள்ளூர் செய்திகள்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

கடலுார்: பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தில், 3வது கட்டமாக, கடலுார் மாவட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் இன்று முதல் வழங்கப்படுகிறது.தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும், காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரை மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.முதல்கட்டமாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி ரத்த சோகை அதிகம் காணப்பட்ட மாவட்டங்கள், தொலைதுார கிராமப் பகுதிகளில் (மாநில சமநிலை வளர்ச்சி நிதி) தரவுகளின் படியும், மலைப்பகுதிகளில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி அடிப்படையில், மையம் மற்றும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 1545 பள்ளிகளில் உள்ள 1,14,095 தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பல்வேறு வகையான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு நாளைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் அளவு 50 கிராம். ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்கு, உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கலாம்.காலைச் சிற்றுண்டி வழங்குவதால் ஒரு குழந்தைக்கு 293.40 கி.கலோரி ஆற்றல், புரதம் 9.85 கிராம், கொழுப்பு 5.91 கிராம், இரும்பு சத்து 20.41 மி.கிராம் மற்றும் சுண்ணாம்பு சத்து 1.64 மி.கிராம் கூடுதலாக கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தினை, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தி தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இந்த நடவடிக்கையினால் மாநிலம் முழுவதும் உள்ள 3995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2,23,536 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.3வது கட்டமாக காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கும் இன்று முதல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் கடலுார் மாவட்ட மாநகராட்சி மற்றும் பேரூராட்சியில் உள்ள 100க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் பயன்பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்