இன்ஜி., கல்லூரிகளில் வசூல் வேட்டை; அரசு எச்சரிக்கை புறக்கணிப்பு
தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அவை அனைத்தையும் மீறி, பல தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து வருகிறது. தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, தரச்சான்று பெறப்பட்ட படிப்புகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும், தரச்சான்று பெறப்படாத படிப்புகளுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான கமிட்டி நிர்ணயித்துள்ளது. ‘தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பு ரத்து செய்யப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் கல்விக் கட்டணத்தை அண்ணா பல்கலைக் கழகம், வங்கிகள், கல்லூரிகள் என விருப்பப்பட்ட இடத்தில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின்போது, மாணவர்களிடமிருந்து முன்பணமாக ஐந்தாயிரம் ரூபாய் (எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் ஆயிரம் ரூபாய்) வசூலிக்கப்படுகிறது. கவுன்சிலிங்கில் இடத்தைத் தேர்வு செய்யும் மாணவர்கள், இந்த முன்பணம் போக, கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்த வேண்டும். ஆனால், பல தனியார் கல்லூரிகள், தங்களது கல்லூரியில் சேர வரும் மாணவர்களிடம், கவுன்சிலிங்கின்போது செலுத்தப்பட்ட முன்பணத்தையும் சேர்த்து வசூலிக்கின்றன. மேலும் பல தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், நிர்ணயிக்கப்பட்டதை விட மிக அதிகமாக கல்விக் கட்டணம் வசூலிக்கின்றனர். சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள பிரபல குரூப் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் போக, புத்தகம் மற்றும் உபகரணங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய், ஆய்வுக்கூட டெபாசிட் கட்டணம், இதர கட்டணங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வரும் இப்பிரச்னைகளைத் தவிர்க்க கல்விக் கட்டணம் முழுவதையும் மொத்தமாகவோ, தவணை முறையிலோ அரசே வசூலித்து, சம்பந்தப்பட்ட தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு வழங்க வேண்டும். வேறு பெயர்களில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தீவிரமாகக் கண்காணித்து அரசு சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடம் புகார் தெரிவிக்கலாம்?: ‘தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், இதற்கென நியமிக்கப்பட்டுள்ள 10 அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்’ என அரசு அறிவித்துள்ளது. தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் எல்லா மாணவர்களும், தொழில்நுட்ப கல்வி இயக்கக (டி.டி.இ.,) கூடுதல் இயக்குனர் (பாலிடெக்னிக்), கூடுதல் இயக்குனர் (தேர்வுகள்) ஆகியோரிடம் 044 - 22351018 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.