தனியார் கல்லூரிக்கு தடையில்லா சான்று: ஐகோர்ட் உத்தரவு
தீன தயாள் மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டி.டி.நாயுடு தாக்கல் செய்த மனு:திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழ் கேட்டு தமிழக சுகாதாரத் துறையிடம் விண்ணப்பித்தோம். பின், சான்றிதழ் பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில், தடையில்லாச் சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்பட்டது. எனவே, மத்திய அரசு கோரியபடி இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்த படிவத்தில் தடையில்லாச் சான்றிதழ் வழங்க தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி கண்ணன், ‘அரசு ஏற்கனவே நேரடி ஆய்வு செய்துள்ளது. தேவையான அம்சங்கள் அனைத்தையும் கல்லூரி பூர்த்தி செய்துள்ளதாகக் கருதியுள்ளது. ஆகையால், நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் இந்த சான்றிதழை மாநில சுகாதாரத் துறை வழங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.