அனிமேஷன் தொழிலை மேம்படுத்த புதிய குழு அமைப்பு
சென்னை: தமிழகத்தில், அனிமேஷன், கணினி வழி குழந்தைகள் விளையாட்டு மற்றும் மல்டி மீடியா தொழிலை மேம்படுத்த, தனியார் நிறுவன பிரதிநிதிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அனிமேஷன் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வது, தொழில் தொகுப்புகளை உருவாக்குதல் குறித்த பரிந்துரைகளை, ஆறு மாதத்துக்குள்அரசுக்கு அளிக்க, இக்குழுவுக்கு அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்குத் துறையில் அனிமேஷன் தொழில், மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இதனால், கணினி வழி குழந்தைகள் விளையாட்டு, அனிமேஷன் தொழில்களை, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்தபட்ஜெட்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, அனிமேஷன், கணினி வழிகுழந்தைகள் விளையாட்டு, மல்டி மீடியா ஆகிய தொழில்களில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பிரபாகர், குழு ஒன்றை அமைத்துள்ளார். பதினொரு பேர் கொண்ட இக்குழுவுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், தலைவராக இருப்பார். நிதி, தொழில் துறை முதன்மை செயலர்கள், எல்காட் நிர்வாக இயக்குனர், சி.ஐ.ஐ., தலைவர் ஸ்ரீதரன், நாஸ்காம் சென்னை மண்டல இயக்குனர் புருஷோத்தமன் உள்ளிட்ட, 11 பேர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.