உள்ளூர் செய்திகள்

மரத்தடி வகுப்பறைகள்: போந்தூர் உயர்நிலை பள்ளியின் அவலம்

சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டுள்ளது போந்தூர் கிராமம். இங்கு, கடந்த 1954ம் ஆண்டு, ஒன்றிய துவக்கப் பள்ளி துவக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கடந்த 1986ம் ஆண்டு, நடுநிலைப் பள்ளியாகவும், அதன்பின், 2007ம் ஆண்டு, உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இதில், போந்தூர், விளாங்காடு, சிறுகளத்தார், கொக்கரந்தாங்கல், வயலூர், ஆற்காடு, அமந்தங்கரனை, பனையடிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, 232 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில், ஒரு ஓட்டு கட்டடம் உட்பட ஐந்து கட்டடங்கள் உள்ளன. இதில், ஓட்டுக் கட்டடம் சேதமடைந்துள்ளதால், அங்கு, வகுப்பறைகள் நடைபெறுவதில்லை. மீதமுள்ள, நான்கு கட்டடங்களில், வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. உயர்நிலைப் பள்ளி, தரம் உயர்த்தப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வகுப்பறை கட்டடங்கள் கட்டித் தரப்படாததால், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், துவக்கப் பள்ளிக்கான கட்டத்தில் பயின்று வருகின்றனர். இங்கு, போதிய இட வசதி இல்லாததால், மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், வெயில் மற்றும் மழைக் காலங்களில், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  இதுகுறித்து, பள்ளியின் கல்விக்குழு தலைவர் முத்துமல்லா கூறியதாவது: போந்தூர் கிராமத்தில், ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பள்ளி வளாகம் அமைந்துள்ளதால், உயர்நிலைப் பள்ளிக்கு, வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு, 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், சொந்த இடம் இல்லாததால், பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், பள்ளி வளாகம் அமைந்துள்ள கோவில் நிலத்தை, கல்வித்துறைக்கு பட்டா மாறுதல் செய்து தர வேண்டும், அல்லது கோவில் நிலத்தில், உயர்நிலைப் பள்ளிக்கான கட்டடம் கட்டுவதற்கு, அறநிலையத்துறையிடம் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே, வகுப்பறை கட்டடம் கட்ட முடியும் என, தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, அறநிலையத்துறை ஆணையரை நேரில் சந்தித்து, மனு கொடுத்து உள்ளோம். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, வகுப்பறை கட்டடம் கட்ட, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், "அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில், பள்ளிக்கட்டடம் கட்ட இயலாது. எனவே, பள்ளிக்கு அரசு நிலம் வழங்கினால் மட்டுமே, வகுப்பறை கட்டடம் கட்ட முடியும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்