தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: இத்தீர்ப்பில், "இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் வெளியிட்ட, இளங்கலை, முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவு தேர்வு, அரசியல் அமைப்புக்கு எதிரானது" என்று கருதப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க வேண்டும் என, ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களின் நலனையும், தமிழக நலனையும் பாதித்து வந்த தேர்வு நடைமுறைகளை, இத்தீர்ப்பு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தீர்ப்பில், மற்ற மனுதாரர்கள் எழுப்பியிருந்த வாதங்களுடன், தமிழ்நாடு அரசின் மனுவில் எழுப்பியிருந்த, மதிப்பு வாய்ந்த, அனைத்து ஆட்சேபனைகளையும், சுப்ரீம் கோர்ட் தன் தீர்ப்பு வாசகங்களில் குறிப்பிட்டுள்ளது. இத்தீர்ப்பு பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது. இத்தீர்ப்பை அனுசரித்து போவதற்கு பதிலாக, "மத்திய அரசு, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட் செல்ல வேண்டும்&' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது, ஏற்கனவே, தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட, நல்ல முறையில் செயல்பட்டு வரும், நியாயமான, வெளிப்படையான மாணவர் சேர்க்கை கொள்கை மூலம், தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் மனதில், விரக்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் உரிமைகளையும், தமிழகத்தில் செயல்பட்டு வரும், மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கைகளை நீர்த்து போகச் செய்யும் வகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, மறுஆய்வு செய்யக் கோரும் முயற்சிகளை, தமிழக அரசு வலுவாக ஆட்சேபிக்கிறது. தமிழக அரசு, 2005ல் இருந்து, பல திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்ததால், தொழில் முறை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, தமிழகத்தில் ரத்தானது. நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய, பயிற்சி நிறுவன வசதி மற்றும் பாடப் புத்தகங்கள், கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள, திறமைமிக்க கிராமப்புற மாணவர்கள், பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், பலனடைந்து வருகின்றனர். தற்போது நிலவும் சமூக, பொருளாதார சூழல் மற்றும் நிர்வாக தேவைகளுக்கு, தேசிய தேர்வு பொருத்தமாக இருக்காது. எனவே, சுப்ரீம் கோர்ட்டில், என்.இ.இ.டி., நுழைவுத் தேர்வை, மறு அறிமுகம் செய்யக்கோரி, மனுதாக்கல் செய்யப்போவதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறியிருப்பதை, உடனடியாக கைவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை, மத்திய அரசு எந்த விதமான மறு பரிசீலனையையும் கோராமல், ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.