ஜாமியா மிலியா சார்பில் புதிய மருத்துவக் கல்லூரி
புதுடில்லி: ஜாமியா மிலியா பல்கலையால், ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விரைவில் ஏற்படுத்தப்படும் என்று அப்பல்கலை துணைவேந்தர் தலாத் அகமது கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அருகிலுள்ள பகுதிகளில், வேறெந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இல்லாததால், ஜாமியா மிலியாவில் அது அமைவது அவசியமாகிறது. உச்சநீதிமன்றத்தால், 114 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், ஒரு வழக்கின் மூலம், பல்கலைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலம், மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு பயன்படுத்தப்படும். முதலில், 300 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையும், பின்னர் மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியுதவி மற்றும் இதர உதவிகளை அரசாங்கம் அளிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.