உள்ளூர் செய்திகள்

கட்டக் கழிவுகள் குவிப்பால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், கட்டக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். உடுமலை, குறிஞ்சேரி அரசு துவக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 60 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்த நிலையில் இருந்த கட்டடத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர் புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, ஒன்றிய அதிகாரிகளின் மேற்பார்வையில், அக்கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில், மொத்தம் 4 வகுப்பறைகள் மற்றும் ஒரு தலைமையாசிரியர் அறையும் உள்ளது. இதில், இரண்டு வகுப்பறை கொண்ட ஒரு கட்டடம் கட்டப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்ததால், கடந்த 2009 ம் ஆண்டு சீரமைப்பு பணி நடந்தது. இப்பணியின் போது வகுப்பறை கட்டடம் மேலும், சிதிலமடைந்து மாணவர்களுக்கு பயனில்லாதவாறு ஆனது. இதனால் அக்கட்டடம் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது. இதுபோன்று, சிதிலமடைந்த சத்துணவு அறைக்கு மாற்றாக ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் புதிய சத்துணவு மையம் அமைக்கப்பட்டது. இருப்பினும், அக்கட்டடமும் தகர்க்கப்படாமல் இருந்தது. அப்பகுதி மக்கள், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் அவ்விரு கட்டடங்களையும் அகற்றும்படி புகார் செய்தனர். எனினும், ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையடுத்து, தினமலர் நாளிதழில் அப்பள்ளியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள வகுப்பறை மற்றும் சத்துணவுக் கூடத்தை அகற்றி, புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும் என ஜூலை மாதத்தில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், குறிஞ்சேரி ஊராட்சி நிர்வாகிகளின் உதவியுடன் அக்கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளது. எனினும், அக்கட்டடத்தின் கழிவுகள் இதுவரை, பள்ளி வளாகத்திலிருந்து அகற்றப்படாததால், மாணவர்களின் பாதுகாப்பு மீண்டும் கேள்விகுறியாகியுள்ளது. கட்டடக்கழிவுகள், வகுப்பறை அருகிலேயே இருப்பதால், மாணவர்கள், இடைவெளி நேரங்களில் அவற்றின் மீது விளையாடுகின்றனர். மேலும், பள்ளியின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்த நிலையில் இருப்பாதால், விஷ பூச்சிகள், கட்டடக் கழிவுகளுக்கு வருவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு எந்நேரமும் ஆபத்து காத்திருப்பதாகவும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். மேலும், இப்பள்ளியில், வகுப்பறை பற்றாக்குறை உள்ளதால், தலைமையாசிரியர் அறை வகுப்பறையாக பயன்படுத்தப்படுகிறது. விரைவில் கூடுதல் வகுப்பறை மற்றும் முழுமையான சுற்றுச்சுவர் அமைப்பதற்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்