உள்ளூர் செய்திகள்

இயற்கை சாயத்திற்கு மாறும் நெசவாளர்கள்; கருத்தரங்கில் தகவல்

காந்திகிராமம்: ‘ரசாயன சாயத்தால் ’கேன்சர்’ அபாயம் இருப்பதால் நெசவாளர்கள் இயற்கை சாயத்திற்கு மாறுகின்றனர்,” என பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி விஞ்ஞானி குமரன் தெரிவித்தார். இயற்கை சாயம் குறித்த கருத்தரங்கு காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் நடந்தது. செட்டிநாடு மானாவாரி பயிர் ஆராய்ச்சி மைய தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப வல்லுனர் சரவணன் வரவேற்றார். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி விஞ்ஞானி குமரன் பேசியதாவது: இயற்கை சாயமாக செந்தூரம், இண்டிகோ பயன்படுகிறது. செந்தூரம் ஆந்திராவில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதனை தமிழகத்தில் பிரபலப்படுத்த தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் ரூ.83 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. செந்தூரத்தை ’உதட்டுசாயம் மரம்’ என கூறுகின்றனர். அதன் விதையில் இருந்து எடுக்கப்படும் சாயம் பால்பொருட்கள், உடைகள், உதட்டுசாயமாக பயன்படுகிறது. ஒரு ஏக்கரில் 450 மரங்கள் நடலாம். ஓராண்டிற்குபின் காய்களில் இருந்து விதைகளை எடுக்கலாம். ஒரு மரத்தில் 2 கிலோ வரை கிடைக்கும். தொடர்ந்து 40 ஆண்டுகள் வரை விளைச்சல் இருக்கும். ஒரு கிலோ ரூ.120 க்கு விற்கப்படுகிறது. தோல் ’கேன்சர்’ ஏற்படுவதாக கூறி ரசாயன சாயம் பூசிய ஆடைகளை வாங்க வெளிநாட்டினர் மறுக்கின்றனர். இதனால் ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நெசவாளர்கள் இயற்கை சாயத்தை விரும்ப துவங்கியுள்ளனர். இயற்கை சாயத்திற்கு தேவை இருப்பதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்