உள்ளூர் செய்திகள்

நல்லா பாடம் நடத்தினா ஊக்கத்தொகை: யு.ஜி.சி., திட்டம்!

பல மாநிலங்களில் உள்ள கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் எல்லாம், மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய கமிஷன் கீழ் வருகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் பாட திட்டம், ஆராய்ச்சி பிரிவுகள் போன்றவற்றுக்கு, நிதிஉதவி செய்யவும் கமிஷன் தான் பரிந்துரை செய்யும். நிர்வாக நடவடிக்கைகளிலும் கமிஷன் தலையிடும். பொறியியல், மருத்துவம் உட்பட நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் அந்த அந்தஸ்தை கமிஷன் தான் தருகிறது. இந்த கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களின் திறமையையும், மாணவர்களுக்கான கல்வி வசதிகளை கண்காணிக்கும் பணியையும் இது செய்கிறது. இந்தியாவில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் பெருகிய நிலையில், திறமையான மனித வள மேம்பாடு போதுமான அளவில் இல்லை. திறமையான, ஆராய்ச்சி பேராசிரியர்கள் உட்பட கல்லூரி ஆசிரியர்கள் சமீப காலமாக சரிய ஆரம்பித்துள்ளது. இதனால், அறிவியல் உட்பட பிரிவுகளில் ஆராய்ச்சி விருப்பமும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை சரி செய்ய பல்கலைக்கழக மானிய கமிஷன் சமீபத்தில் டில்லியில் இரு நாள் மாநாட்டை கூட்டியது. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் இஸ்ரோ உட்பட உயரிய அறிவியல், தொழில்நுட்ப அமைப்புகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு, அவர்களின் அடிப்படை சம்பளத்தை தாண்டி, 50 சதவீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதுபோல, திறமையான ஆசிரியர்களை ஊக்குவிக்க, ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த, ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எம்., திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில், தன் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களின் திறமையை, ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க ஊக்கத்தொகை அளிக்கலாம் என்று யு.ஜி.சி., பரிசீலிக்க முடிவு செய்துள்ளது. இந்த வகையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் திறமையை வளர்க்கவும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் அமலாக்கலாம் என்றும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்