உள்ளூர் செய்திகள்

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நெல்லை, குமரி மாவட்டங்கள்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொடர்பியல் துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரா.கிருஷ்ணமூர்த்தி ஸ்டுடியோ காம்பளக்சை துவக்கிவைத்து தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: குறிஞ்சிப்பாட்டில் வரும் 91 பூக்களை துணைவேந்தர் அழகாக குறிப்பிட்டார். எனக்கும் சங்க இலக்கியம் வாசிப்பதில் ஆர்வம் உண்டு. 1984ல் மதுரையில் மன்னன் பெருவழுதி வெளியிட்ட சங்க கால பாண்டிய நாணயத்தை கண்டுபிடித்தேன். இதன் மூலம் சங்ககாலத்திலேயே நாணயம் வெளியிடப்பட்டிருப்பதை வெளிக்கொண்டுவந்தேன். இந்த நாணயம் தமிழர்களின் தொன்மை குறித்த ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. தொடர்ந்து கரூரில் சங்ககால சேர நாணயங்களை கண்டுபிடித்து ஆதாரத்துடன் வெளியிட்டேன். கிரேக்க, ரோமானிய நாணயங்களை கரூரில் கண்டுபிடித்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாடுகளுடன் வாணிப தொடர்பு இருந்ததை நிரூபித்தேன். தற்போது மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர். பின்தங்கிய மாணவர்களும் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் தினமலர் சார்பில் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை பார்க்க மலைப்பாக இருக்கிறது. சமீபகாலத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை பல்கலைக்கு ரூ 65 லட்சம் செலவில் கட்டடம் கட்டிகொடுத்துள்ளேன். அதனை 2007ல் பொள்ளாச்சி மகாலிங்கம் திறந்துவைத்தார். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும். நெல்லை, குமரி மக்களின் வளர்ச்சிக்கு தினமலர் நிறைய பங்காற்றியுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும்போது கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தார்கள். குமரி மாவட்ட தமிழ் மக்கள் கேரளத்துடன் இணைந்துவிடுவோமோ என அஞ்சினர். குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என போராட்டங்கள் நடந்தன. குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பெரும் முயற்சி மேற்கொண்டார். அப்போது சென்னையில் இருந்து இயங்கி வந்த பத்திரிகைகள் அதற்கு முக்கியத்துவம் தராதபோது தினமலர்தான் அதற்கு முக்கியத்துவம் தந்தது. இதற்காக அப்போதே தினமலர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் தொடர்ந்தனர். திருவனந்தபுரத்தில் தினமலர் இயங்கிய 6 ஆண்டுகளும் நஷ்டத்தில்தான் இயங்கியது. தினமலர் நிறுவனர் எந்த பதவிக்கும் ஆசைப்படாமல் மக்களுக்காக செய்திகளை வெளியிட்டார். நான் சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ., பல்கலைக்கழக ரேங்க் பெற்று வெளியே வந்தபோது வேறு வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் பத்திரிகை தொழிலில் இறங்கச்செய்தார். நெல்லை, குமரி மாவட்டங்கள் கல்வியில் வளர்ந்துள்ளன. ஆனால் தொழில்வளர்ச்சியில் இன்னமும் பின்தங்கியே உள்ளன. தொழில்வளர்ச்சியில் சென்னை, கோவை என வடமாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தற்போது மீடியா துறை வளம் சேர்க்கும் துறையாக உள்ளது. இத்துறையில் பலருக்கு வேலைவாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ள முடியும். நாளிதழ், இணையதளம், டிவி என பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தினமலர் இணையதளத்தில் தற்போது வீடியோ செய்திகளும் வெளியிடுகிறோம். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்த செய்தி தினமலர் இணையதளத்தில் வெளியானதும் அதனை 4 லட்சம் பேர் பார்த்தனர். மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலுக்கு உள்ளானபோது ஒரு டிவியின் பெண் நிருபர் 3 நாட்கள் தொடர்ந்து அங்கேயே இருந்து செய்தி வெளியிட்டதை டிவியில் பார்த்தேன். இதைப்போல மீடியா துறைக்கு வரும் மாணவ, மாணவிகள் கடுமையாக உழைத்து உயரவேண்டும் தொடர்பியல் துறை மாணவர்கள் தங்கள் மொழிதிறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக இங்கு ஒரு மொழிஆய்வு கூடம் துவக்க வேண்டும். இந்த பல்கலையின் வசதிகளை மாணவர்களை பயன்படுத்தி வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்