தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
மதுரை: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 14 ஆண்டுகளாக நீடிக்கும் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காணப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் செப்., 28 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்தப்படும் என தமிழ்நாடு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மதுரையில் இச்சங்கத்தின் சார்பில் மாவட்டம் மற்றும் ஒன்பது புதிய வட்டார கிளைகள் துவக்க விழா மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் பேசியதாவது:தமிழகத்தில் 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.8370 எனவும், ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. ஒரே பதவி, கல்வித் தகுதி பணிக்கு இருவேறு சம்பளம் நிர்ணயத்தால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் 14 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பல ஆண்டுகளாக நடந்த போராட்டங்களுக்கு பின் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இப்பிரச்னைக்கு தீர்வுகாண வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்கேற்ப சம்பள முரண்பாடு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிதித்துறை செயலர் தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. அறிக்கை அளிக்காமல் ஆனால் 9 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி செப்.,5 முதல் பல போராட்டங்கள் துவங்கி செப்., 28 ல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது, என்றார்.மாநில துணைத் தலைவர் ஞானசேகரன், துணைச் செயலாளர் வேல்முருகன், மதுரை மாவட்ட தலைவர் பால் பிரின்ஸ், செயலாளர் குமரேசன், மகளிரணி ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.