பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்
கோவை: எமிஸ் பொதுத்தரவில் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான, கணக்கெடுப்பு பணிகள் தொடர்ச்சியாக நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளிக்கல்வித்துறை, தேசிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு திட்டம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் மே மாதம், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தி, இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது வழக்கம்.மாணவர்களின் விபரங்களை, பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றிய பின், நீண்டநாட்கள் விடுப்பில் உள்ளோர், டீ.சி., பெற்று வேறு பள்ளியில் சேராதவர்கள், டீ.சி., பெறாமல், பள்ளிக்கு வராதவர்களின் பட்டியல், எமிஸ் பொதுத்தரவில் பெறும் வசதி உள்ளது. இதில் இடம்பெறும் மாணவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், எமிஸ் பொதுத்தரவில் இடம்பெற்ற மாணவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் போன்ற தகவல்களை, இணையதளத்திலே பெறலாம். இதைக் கொண்டு, இடைநிற்றல் தழுவியோர் அடையாளம் காணலாம். இம்மாணவர்கள், வேறு பள்ளி அல்லது தொழிற்கல்வி பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தால், பெயர் நீக்கப்படும்.வேறு இடங்களுக்கு இடப்பெயர்வு செய்தவர்கள், மீண்டும் பள்ளியில் சேராதவர்களை மட்டும், தொடர்ச்சியாக ஆய்வு செய்து, பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர். பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு பிரத்யேக செயலி உள்ளதால், ஆண்டு இறுதியில், இடைநிற்றல் தழுவியவர்களில் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்கள் விபரங்கள் வெளியிடப்படும் என்றனர்.