பூதங்கள் நம்மை தின்னும் காலம் இது: ஸ்டாலின்
கவிஞர் வைரமுத்து எழுதிய மகா கவிதை நுால் வெளியீட்டு விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நுாலை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., எம்.பி.,யுமான சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.பூமியின் காவலர்கள்விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கவிஞர் வைரமுத்து எழுதிய எல்லா நதியிலும் என் ஓடம் எனும் நுாலை, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1989ல் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவர், வைரமுத்துவின் 15 நுால்களை வெளியிட்டார்.நான், வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நுாலை வெளியிட்டேன்; இப்போது, மகா கவிதையை வெளியிடுகிறேன். அவர் தொடர்ந்து எழுத, நான் வெளியிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். வைரமுத்து, கவிராஜன் கதை என்ற தலைப்பில், பாரதியைப் பற்றி எழுதினார்.அதுபோல், கருணாநிதியைப் பற்றியும் எழுத வேண்டும். பூமியின் காவலர்களாக இருந்த ஐம்பூதங்களை, மனிதன் மாசுபடுத்த துவங்கினான். இதனால், புவி வெப்பமடைந்து, அந்த பூதங்கள் நம்மை தின்னத்துவங்கி உள்ளன.இதனால் தான், கனமழை பெய்வது உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. இதிலிருந்து விடுபட, கார்பனை குறைக்க வேண்டும். அதற்காகத்தான், மாசு கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத்துறையை உருவாக்கி, 500 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது:இந்த நுால், தமிழின் ஆழத்தில் இருந்து, அறிவியலின் உயரத்தை அளக்கிறது. இதை, பாடப்புத்தகத்தைப் போல பல முறை படிக்க வேண்டும். இதில், முதல் கருந்துளையின் காலம், 450 கோடி ஆண்டுகள் என உள்ளது. ஆனால், 1,360 கோடி ஆண்டுகள் என, யேல் பல்கலை பேராசிரியரான தமிழர் பிரியம்வதா நடராஜன் சமீபத்தில் கண்டறிந்துள்ளார். அதை, அடுத்த பதிப்பில் புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இயற்கை எரிபொருள்கவிஞர் வைரமுத்து பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினின் கட்டளையை ஏற்று, கலைஞர் காவியம் எழுதுவேன். இந்த &'மகா கவிதை&' நுால், பாரதி, பாரதிதாசனின் கனவுகளை நிறைவேற்றும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கு அறிவியலை தரும் வகையிலும் படைக்கப்பட்டுள்ளது.முக்கியமாக, மேற்கு நாடுகளுக்கும் சேர்த்து, இந்தியாவின் தென்கோடியிலிருந்து, இந்த பூமியை காக்க செய்ய வேண்டிய கடமைகளை, இந்த நுால் வலியுறுத்துகிறது. கார்பனுக்கு பதிலாக, பாலி சிலிக்கானில் இருந்து, இயற்கை எரிபொருளை தயாரிக்கும் உத்திகளை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வேண்டும் என, வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.