பள்ளி மேலாண்மை குழு மாநாடு நடத்த ஏற்பாடு
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் மேலாண்மை குழுக்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 325, நடுநிலைப்பள்ளிகள் 99, உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் 70 என மொத்தம் 530 அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலலும் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்.எம்.சி.,) உள்ளது. இந்த குழுவில் முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் என 20 பேர்இடம்பெறுவர். இவர்கள் பங்கேற்கும் கூட்டம் பள்ளிகளில் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. கூட்டத்தின் மூலம் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள 530 பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளை ஒருங்கிணைத்து மாநாடு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகள் நடந்துவருகிறது.கலெக்டர் தலைமையில் மாநாடு நடத்தவும், மாநாட்டில் பள்ளிக்கு இருவர் அதாவது தலைமையாசிரியர், எஸ்.எம்.சி., உறுப்பினர் ஒருவர் என இருவர் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பள்ளிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.