மாணவர்கள் தினமும் புத்தகம் வாசிக்கணும்: கவிஞர் நாணற்காடன்
நாமக்கல்: மாணவர்கள் தினமும் புத்தகம் வாசிக்க வேண்டும் என தமிழ்க்கூடல் விழாவில் கவிஞர் நாணற்காடன் பேசினார்.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழ் மன்றம் மேம்பாட்டு திட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்க்கூடல் விழா நடந்தது. தலைமையாசிரியர் பெரியண்ணன் தலைமை வகித்தார். முதுகலை பொருளியல் ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். முதுகலை தமிழாசிரியர் ராமு, தமிழாசிரியர் அம்சவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எழுத்தாளரும், கவிஞருமான நாணற்காடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், மாணவர்கள் நாள்தோறும் புத்தகம் வாசிக்க வேண்டும். தினமும் புத்தகம் படிப்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. பிற மொழியில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்புகளை தமிழ் மொழி பேசுபவர்களும் அறிந்துகொள்ள, மொழிபெயர்ப்பு மிகவும் உதவுகிறது என்றார்.விழாவில், தமிழ் இலக்கிய மன்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. தமிழாசிரியர் நவமணி, மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.