உலக வங்கியின் மதிப்பீட்டாளர் அரசு மருத்துவமனையில் ஆய்வு
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையின் தரம், கட்டட வசதிகள் மற்றும் பராமரிப்புகள் குறித்து, உலக வங்கியின் வெளிப்புற மதிப்பீட்டாளர் ஆய்வு செய்தார்.தமிழக அரசு, மக்களின் சுகாதாரத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளை மேம்படுத்த, உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது.இதன் ஒரு பகுதியாக, உலக வங்கியின் மதிப்பீட்டாளர்கள், மருத்துவமனைகளை நேரில் ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை, உலக வங்கிக்கு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் இருந்து வந்திருந்த உலக வங்கியின், வெளிப்புற மதிப்பீட்டாளர் டாக்டர் ராமன்ஜீத்சிங் நேற்று, தொண்டாமுத்தூர் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.அங்கிருந்த நோயாளிகளிடமும், சிகிச்சை அளிக்கும் ரீதி குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையின் முதன்மை டாக்டர் (பொ) சினேகல், இதர டாக்டர்கள், நர்சுகள் இருந்தனர்.