தீன்தயாள் உபாத்யாய திட்டம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி
சென்னை: தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகின்றன. இதற்கான நிதியை, மத்திய அரசும், மாநில அரசும், 60:40 சதவீதமாக வழங்குகின்றன.இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வாயிலாக, 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இப்பயிற்சியில் சேர தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெற, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.இது மட்டுமின்றி, தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும், 50 இடங்களில் இளைஞர்களுக்கு திறன் திருவிழா மற்றும் 50 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளில், ஊரக வளர்ச்சி துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சுணக்கமாக இருந்த இத்திட்ட பணிகள், பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்த பின் வேகமெடுத்துள்ளன.