துவக்க கல்விக்கு தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்கள்
புதுடில்லி: ஹரியானா, மணிப்பூர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆரம்ப கல்வியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.ஆரம்ப கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தேசிய மாதிரி சர்வே அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தேசிய அளவில், ஆரம்ப கல்வியில் படிக்கும் குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் 66.7 சதவீதம் பேர் அரசு பள்ளியிலும், 23.4 சதவீதம் பேர் அரசு உதவி பெறும் அல்லது தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஹரியானா, மணிப்பூர், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் , 1 முதல் 5ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிகமாக உள்ளது.ஹரியானாவில் 45.6 சதவீதம் பேர் தனியார் பள்ளியிலும்,40.2 சதவீதம் பேர் அரசு பள்ளியிலும் தெலுங்கானாவில் 57.5 சதவீதம் பேர் தனியார் பள்ளிகளிலும் 30.5 சதவீதம் பேர் அரசு பள்ளியிலும் மணிப்பூர் மாநிலத்தில் 74 சதவீதம்பேர் தனியார் பள்ளிகளிலும், 21 சதவீதம் பேர் அரசு பள்ளிகளிலும் படிக்கின்றனர்.நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் தான் அதிகளவு தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இப்பகுதிகளில் வசிப்பவர்களில் 43.8 சதவீதம் பேர் தனியார் பள்ளியிலும், அரசு பள்ளியில் 36.5 சதவீதம் பேரும் குழந்தைகளை சேர்த்து உள்ளனர்.இதற்கு மாறாக , ஆரம்ப கல்விக்காக தனியார் பள்ளிகளை நாடுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்கள் மேற்கு வங்கம் 5 சதவீதம் பேர்.திரிபுரா 6.2 சதவீதம் பேர்ஒடிசா 6.3 சதவீதம் பேர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.