பூந்தமல்லி தபால் ஆபீசில் மாணவர்களால் தள்ளுமுள்ளு
பூந்தமல்லி: பூந்தமல்லி தபால் அலுவலகத்தில், நாள்தோறும் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை பெற, ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், அரசு பள்ளியில் படிக்கும், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு வழங்கும் கல்வி நிதி உதவி பெறுவதற்கான தபால் கணக்கு துவங்க, ஏராளமான பள்ளி மாணவர்களும், பெற்றோரும், நேற்று காலை முதலே குவிந்தனர்.இங்கு, நாள் ஒன்றுக்கு, தபால் கணக்கு துவங்க, 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால், ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனால், நேரடியாக அரசு பள்ளிகளுக்கு ஆவணங்களை கொடுத்து, கணக்கு துவங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.