உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் தனித்த நாகரிகம் இருந்தது அகழாய்வில் உறுதி!

சென்னை: பிரிட்டிஷாருக்கு பிந்தைய சிந்துவெளி ஆய்வுகள், பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தனித்த நாகரிகம் இருந்ததை, அகழாய்வுகள் உறுதி செய்கின்றன, என, மத்திய தொல்லியல் துறையின் கூடுதல் பொது இயக்குநர் சந்தோஷ்குமார் மஞ்சுல் பேசினார்.சென்னை, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரியில், சிந்துவெளி பண்பாடு' குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. அதில், அவர் பேசியதாவது: பிரிட்டிஷ் காலத்தில் ஹரப்பா நாகரிகம், அகழாய்வின் வாயிலாக வெளிப்பட்டது. அதில் கிடைத்த பொருட்கள், பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.அவை, இந்திய நாகரிகம் என புகழ்பெற்ற நிலையில், நாட்டு பிரிவினையின்போது, அதன் பெரும் பகுதி பாகிஸ்தானுக்கு சென்றன. நாம், நம் பாரம்பரியத்தை ஆராய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.பல மாறுதல்கள்நாடு முழுதும், ஆயிரக்கணக்கான இடங்களை, மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்படிதான், ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், அந்த நாகரிகம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், வடக்கே பலுசிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தன. அங்கும் இதே நாகரிகம் வெளிப்பட்டது.அதாவது, 6,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 2,500 ஆண்டுகள் வரை, ஒரே மாதிரியான நாகரிகம் பல ஆயிரம் கி.மீ.,க்கு பரவி இருந்ததை அறிய முடிகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பின் ஆராய்ந்ததில், ஹரப்பா நாகரிகம் என வரையறுக்கப்பட்ட நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டம் மற்றும் பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.அதுவும், ஒவ்வொரு இடத்திலும், அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. முக்கியமாக, ராஜஸ்தான் பகுதியில் வெயில் அதிகம் என்பதால், வீடு கட்டுவதற்கான செங்கல்கள் சுடப்படவில்லை. அதேநேரம், கிணறுகளில் சுட்ட செங்கல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இப்படி, இடத்தின் தேவைக்கு ஏற்ப பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.முக்கியமாக ராக்கிகரி, தொலவீரா, காலிபங்கன், பிஞ்சூர் உள்ளிட்ட தொல்லியல் தளங்கள் மிக முக்கிய கண்டுபிடிப்புகள். ராக்கிகரியின் சினவ்லியில் வெண்கல காலத்தைச் சேர்ந்த சிறிய ரதம் கண்டுபிடிக்கப்பட்டது.இது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதாவது, இது பொம்மையாக இருந்திருக்கலாம். இதன் மேம்பட்ட வடிவம் புழக்கத்தில் இருந்திருக்கலாம். இங்கு, காளைகள் பூட்டும் வண்டியும் கிடைத்தது; ரதம், குதிரை பூட்டும் வகையில் உள்ளது.116 ஈமக்குழிகள்அதாவது, வேத காலத்தில், குதிரைகள் புழக்கத்தில் இருந்தது பற்றிய குறிப்புகள் உள்ள நிலையில், இந்த பகுதியில் குதிரை எலும்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதேநேரம், காம்போஜா, வானாயு போன்ற இடங்களில் இருந்து குதிரைகள் வந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.இங்கு, 116 ஈமக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில், போர் வீரர் உடல்கள் புதைக்கப்பட்ட அடையாளங்களும் கிடைத்துள்ளன. அரிதாக, போரில் பெண்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களுடன் வைக்கப்பட்டிருந்த செம்பு வாளுக்கு, மரப்பிடி போட்டிருந்ததை கண்டுபிடித்தோம்.முக்கியமாக, மஹாபாரதத்தில் அர்ஜுனன் ரதத்தை பயன்படுத்தியதும், அதில் ஓட்டுநருக்கு தனி இருக்கை இருந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இங்குள்ள ரதத்தில் ஒரே இருக்கையும், ஒரு குதிரை பூட்டும் வசதியும் உள்ளது.பொதுவாக, சிந்துவெளியில் பல்வேறு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களில் பலர் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வடக்கே பல நாடுகளுடன் தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பெரும்பாலான முத்திரைகள், வணிகம் சார்ந்தவையாக உள்ளன.மேலும், சிட்டாடல் எனும் முறையில், பொருளாதார வசதியுடன் கூடிய மேல்தட்டு, இடைத்தட்டு, கீழ்த்தட்டு மக்களுக்கான குடியிருப்புகள் தனித்தனியாக இருந்துள்ளன.எந்த வாய்வழி மற்றும் இலக்கிய வழி ஆதாரங்களையும், புறந்தள்ள முடியாது. அதனால், வேதங்களில் உள்ள கருத்துகளையும் ஆராய்ந்து ஒப்பு நோக்க வேண்டி உள்ளது.ஆதாரம் இல்லைபொதுவாக பிரிட்டிஷார், சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்றும், வேத காலத்துடன் தொடர்பில் இல்லாதது என்றும் கூறினர். மேலும், ஆரியர்களின் வருகை மற்றும் போரால் இது அழிந்திருக்கலாம் என்றும் கூறினர். ஆனால், ஆரியர்கள், இவ்வளவு பெரிய நாகரிகத்தை அழிக்கும் வீரர்களாக இருந்திருந்தால், அவர்கள் அதை விட பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்க வேண்டும்.அவர்கள் எங்கே போயினர், அப்படி எந்த போரில் ஈடுபட்டனர், ஆரியர்கள் பெரிய வீரர்களாக இருந்திருந்தால், அவர்களில் வீர மரபினர் எங்கே என்ற கேள்விகள் எழுகின்றன. அதனால், ஆரிய கோட்பாடுக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்துவெளி பானை ஓட்டு குறியீடுகளுக்கும், தமிழக அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓட்டு குறியீடுகளுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. அதேநேரம், காலம் மிகப்பெரிய இடைவெளியாக உள்ளது.மற்ற பண்பாட்டு ரீதியான ஒற்றுமைகள் ஏதும் கிடைத்ததாக தெரியவில்லை. அதேநேரம், தமிழகத்துடன் வணிக தொடர்பில் இருந்திருக்கலாம்.மேலும், தமிழகத்தில் தனித்த நாகரிகம் இருந்ததையே அறிய முடிகிறது. தமிழகத்தில் நிறைய அகழாய்வுகள் செய்ய வேண்டியுள்ளன. முக்கியமாக, கடலடி அகழாய்வு செய்ய வேண்டியுள்ளது; கடலாய்வு மிகவும் சவாலானது. தமிழகத்தில் கடலாய்வு செய்வது குறித்து, கோரிக்கை ஏதும் வரவில்லை.துவாரகா கடலடி அகழாய்வு, முதற்கட்ட நிலையில்தான் உள்ளது. முக்கியமாக, பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிந்தைய அகழாய்வுகள், ஏற்கனவே உள்ள கற்பிதங்களுக்கு மாறான உண்மைகளை சொல்கின்றன.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ஜே.ஆர்.என்., பல்கலை தொல்லியல் துறை பேராசிரியர் ஜீவன் கரக்வால், ராஜஸ்தானின் உதய்பூருக்கு அருகில் உள்ள ஜாவர் பகுதியில் செய்த அகழாய்வில், பொது யுகத்துக்கு முன், 3,800ல் இருந்து 1,500 வரை உள்ள கிராம நாகரிகங்களை பற்றி பேசினார்.அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், சிந்துவெளி மக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்கள், செம்பு, துத்தநாகம் உள்ளிட்டவற்றை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்ததாகவும், சிந்துவெளிக்கு அவற்றை வழங்கி இருக்கலாம் என்றும் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்