மாணவர்களுக்கான சூழலாக பள்ளிகளை மாற்றுங்க! ஆசிரியர்கள் வலியுறுத்தல்
உடுமலை: கல்வியில் மட்டுமின்றி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுப்புற சூழலிலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில், பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு பிடித்தமான கல்விச்சூழலை ஏற்படுத்தும் பள்ளிச் சூழலை அமைப்பதற்கு, பள்ளி முழு வளர்ச்சித்திட்டம் செயல்படுத்துவதற்கும் அரசு அறிவித்தது.இத்திட்டத்தில், பள்ளியின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை தவிர, பள்ளிச்சூழலை மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு, பள்ளி நிர்வாகத்திடம் கருத்துகள் கேட்கப்பட்டது.பள்ளி நிர்வாகத்தினரும், ஆவலுடன் தங்களின் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து, கருத்துரு அனுப்பினர்.அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான இத்திட்டத்தை செயல்படுத்த, சில பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவற்றுக்கு தேவையான வசதிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்வதற்கும் அறிவிக்கப்பட்டது.ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், அரசுப்பள்ளிகளுக்கு பயனுள்ள இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. இருப்பினும், பள்ளிகளை மிளிர செய்யும் கூடுதல் வசதிகள் பெற்றோரின் கவனத்தை பெறும். மாணவர்களுக்கும் அது புத்துணர்ச்சியான சூழலாக இருக்கும் என்றனர்.