தாட்கோ திறன் பயிற்சி சட்டசபை தேர்தலால் முடக்கம்
சென்னை: 'தாட்கோ சார்பில் வழங்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளை, தேர்தலையொட்டி அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அதை தொடர வேண்டும்' என, மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' சார்பில், எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், அழகு கலை, ஆடை வடிவமைப்பு, 'ட்ரோன்' இயக்குவது உட்பட, 15க்கும் மேற்பட்ட பிரிவுகளில், இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.இதை பெற, 18 வயதிற்கு மேற்பட்ட, ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கு உட்பட்ட, படித்து வேலை வாய்ப்பற்ற, எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்கள் தகுதியானவர்கள். பயிற்சிக்கான முழு செலவையும் தாட்கோ ஏற்றுக் கொள்ளும். கடந்த நான்கரை ஆண்டுகளில், இத்திட்டத்தின் கீழ், 16,558 பேர் பயனடைந்துள்ளனர்.இந்நிலையில், தேர்தல் பணிகளை காரணம் காட்டி, தாட்கோ அதிகாரிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம், திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த அறிவிப்புகள் வெளியானது.அதன்பின் புதிய பயிற்சி திட்டங்கள் குறித்த, எந்த தகவலையும், அதிகாரிகள் வெளியிடவில்லை என, மாணவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, சென்னை எம்.சி., ராஜா விடுதி மாணவர்கள் சிலர் கூறுகையில், 'கோடையை விடுமுறையையொட்டி, 'தாட்கோ' நடத்தும், திறன் மேம்பாடு பயிற்சியில் பங்கேற்க நினைத்தோம்.'ஆனால், தேர்தல் பணியை காரணம் காட்டி, தாட்கோ அதிகாரிகள் பயிற்சியை கைவிட்டனர். இதை கோடையில் தொடர்ந்து நடத்த, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.