கோடை சிறப்பு வகுப்புகள் தனியார் பள்ளிகளில் நடக்குது!
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளிகளில், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளது.இதற்கிடையே, தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டில் (2026 - 27) பொதுத்தேர்வு எழுதவுள்ள, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக தெரிகிறது. தற்போது, வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால், குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு, உடல்நிலையும் சோர்வடையும் என்பதால், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்தினால், அப்பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை மீறி , சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. உடனடியாக பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்து சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.