உள்ளூர் செய்திகள்

பார்வையை காரணம் காட்டி பள்ளியில் அனுமதி மறுப்பு

ராமநாதபுரம்: பார்வையை காரணம் காட்டி, பள்ளிக்கு வர ஆசிரியர்கள் அனுமதி மறுத்த பெண், தற்போது பிழைப்புக்கு சிரமப்படுகிறார்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வாத்தியார் தோப்பை சேர்ந்த பில்லன் மகள் கவிதா(18). இவருக்கு மாலைக்கண்நோய் இருந்தது. மண்டபம் அரசு தொடக்கப் பள்ளியில் நன்கு படித்துக் கொண்டிருந்த கவிதாவின் பார்வை, நாளடைவில் குறையத் துவங்கியதை காரணம் காட்டி, பள்ளிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, நான்காம் வகுப்புடன் கவிதாவின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வீட்டில் முடங்கிய கவிதாவுக்கு, குடும்பத்தார் மட்டுமே உலகமாகினர். காலம் கடந்த நிலையில் பெற்றோருக்கு முதுமை ஏற்படவே, பிழைப்புக்கு வழிதேட துவங்கினார், கவிதா. தனது எதிர்காலத்திற்கு உதவி கேட்டு, தாய் சமுத்திரவள்ளியுடன் ராமநாதபுரம் வந்த கவிதா, அதிகாரிகளிடம் மனு அளித்தார். அவர் கூறியதாவது: நன்கு படித்துக்கொண்டிருந்த எனக்கு, பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பகல் பார்வையில் சிரமம் இல்லாமல் இருந்தது. படிப்பை நிறுத்திய பின், வீட்டில் முடங்கியதால், முழுமையாக பார்வை குறைந்து வருகிறது. அப்பா இறந்த நிலையில், எனது எதிர்காலம் கருதி உதவிகேட்டு வந்தேன். இவ்வாறு கவிதா கூறினார். உதவி செய்ய விரும்புவோர், 96593 92763 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !