பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆயக்கலைகள் 64 கண்காட்சி தொடக்கம்
சென்னை: நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில், மாணவர்களின் படைப்பாற்றலையும் பாரம்பரிய கலைகளையும் ஊக்குவிக்கும் வகையில், 'ஆயக்கலைகள் 64' என்ற தலைப்பில் இரண்டு நாள் கண்காட்சி, இன்று (அக்.,23) தொடங்கியது.கண்காட்சியை, பரத நாட்டிய கலைஞரும் நிருத்யோதயா அமைப்பின் இயக்குநருமான பத்மா சுப்பிரமணியம், இன்று தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியர், பெற்றோர் என, ஏராளமானோர் கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.அந்தவகையில், நாட்டின் தொன்மையான பண்பாடு மற்றும் கலை மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய கலை வடிவங்களையும் தற்காலச் சிந்தனைகளோடு இணைத்து, மாணவ - மாணவியர் அரங்குகள் அமைத்திருந்தனர்.'அறிவுக் கலைகள்' எனும் அரங்கில், கம்பராமாயணம் உள்ளிட்ட இதிகாச இலக்கியங்கள், பழங்காலக் கப்பல் போக்குவரத்து வழிகாட்டல் கருவிகள், வானியல் மற்றும் மூலிகை மருத்துவத்தின் பயன்கள் விளக்கப்பட்டுள்ளன.'வாழ்வியல் கலைகள்' எனும் அரங்கில், ஸ்ரீரங்கம் கோவில் வளாக அமைப்பைக் அடிப்படையாக வைத்து, இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் வாழ்வியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.'பாரம்பரிய விளையாட்டுகள்' எனும் அரங்கில், உடற்பயிற்சி, நீச்சல், தற்காப்புக் கலைகள் மற்றும் பண்டைய போர் முறைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளனஅதுமட்டுமல்லாமல், ஓவியங்கள், சிற்பங்கள், மற்றும் கைவினைப் பொருட்கள் மூலம் 'ஆயக்கலைகள் 64'ன் தத்துவங்களும் வடிவங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.இது குறித்து பள்ளி முதல்வர் வசந்தி கூறுகையில், “இளம் தலைமுறையினரிடையே, நாட்டின் தொன்மையான கலை மற்றும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, இக்கண்காட்சியின் முதன்மை நோக்கம்,” என்றார்.