புத்தகங்கள் ஏன் விநியோகிக்கப்படவில்லை-வழக்கறிஞர் கேள்வி
சமச்சீர் கல்வி குறித்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எல். செளஹான் ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சமச்சீர் கல்விக்கு ஆதரவு அளிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடினர். மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதாடுகையில், சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்து செய்ததால் கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்களுக்கு பாடப்புத்தகம் கிடைக்கவில்லை. இது தனி மனித உரிமையைப் பறிக்கக் கூடியதாகும். எந்த ஒரு சட்டம் தனி மனித உரிமையை பறிக்கக் கூடியதாக உள்ளதோ அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது ஆகும். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து வாதாடிய வழக்கிறஞர் கிருஷ்ணமணி, சமச்சீர் கல்விப் புத்தகங்களில் தமிழ் மற்றும் கணக்குப் புத்தகங்களில் எந்த வித பிரச்சினையும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. எனவே, அந்த புத்தகங்களை மட்டுமாவது மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கலாம். ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், 6ம் வகுப்பு சமச்சீர் புத்தத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையும், திருக்குறளும் மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை நீதிபதியிடம் வழக்கறிஞர் கிருஷ்ணமணி காணபித்தார். பின்னர் வாதாடிய வழக்கறிஞர் விடுதலை, சமச்சீர் கல்வி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, சமச்சீர் புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்படு வருகின்றன என்பதை சுட்டிக் காட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், புதிதாக புத்தகக்ள் அச்சடிக்க கீழ் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. சமச்சீர் புத்தகங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பாசவ பப்பு பாட்டீல் கூறுகையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதால் இந்த ஆண்டு மாணவர்களின் கல்வி நிலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார். அவரைத் தொடர்ந்து குரு மெஹதா வாதாடினார். அவர், சமச்சீர் கல்வி குறித்த நல்ல விஷயங்களை எடுத்து வைத்து வாதாடினார். தொடர்ந்து புதன்கிழமையும் விசாரணை நடைபெறும். புதன்கிழமையன்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதாடுகிறார். இவர்களது வாதம் முடிந்த பிறகு எதிர்தரப்பு வாதங்களுக்கு தமிழக அரசு வழக்கறிஞர் பதில் வாதம் அளிப்பார்.