செயல்படத் துவங்கியது மருத்துவ பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம், செயல்படத் துவங்கியது. இம்மாத இறுதிக்குள், தேர்வாணையம் மூலம், செவிலியர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தேர்தெடுக்கப்படுவதால், மிகவும் காலதாமதம் ஆகிறது. இதை கருத்தில் கொண்டு, மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய, தனி தேர்வு வாரியம் அமைக்கப்படும் என, தற்போதைய அ.தி.மு.க., அரசு, சட்டசபையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, இதற்கான அரசு உத்தரவு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது. சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன், தேர்வாணையத்தின் தலைவராக செயல்படுவார் என, உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதன் அலுவலகம், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, மருத்துவப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக கட்டடத்தில் செயல்படத் துவங்கியது. இந்த நிலையில், தேர்வாணையத்தின் முதல் கூட்டம், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில், தேர்வாணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்கட்டமாக, செவிலியர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. அரசு மருத்துவமனைகளில், டாக்டர் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், கடைநிலை ஊழியர்களுக்கு, கடும் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, துப்புரவுப் பணியாளர்கள், வார்டு உதவியாளர் போன்ற பணியிடங்கள், பெருமளவில் காலியாக உள்ளன. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைகளில், ஒப்பந்த அடிப்படையில், கடைநிலை ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடைநிலை ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதில், 50 சதவீத இடங்கள் காலியாக உள்ளதாக, தமிழ்நாடு சுகாதாரத் துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். எனவே, கடைநிலை ஊழியர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, காலி இடங்களில் பணியமர்த்தப்பட வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.