ஆசிரியர்கள் அடித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவன்
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டி காளீஸ்வரி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் பாபு,15. நேற்று முன்தினம் பள்ளி சுவரில் எழுதபட்ட கபடி குழு வாசகம் குறித்து ஆசிரியர்கள் மாரிக்கனி, ஜவகர், ஆனந்த் ஆகியோர் மாணவர்கள் பாபு,பாண்டியராஜன்,வசந்த், தேசிங்குராஜ் ஆகியோரை அடித்துள்ளனர். மேலும், பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். நேற்று மாணவன் பாபு அவனுடைய பெற்றோரை அழைத்து வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் அடிப்பார்களோ என்ற பயத்தில் இடைவேளை நேரத்தில் பள்ளி அருகே ஓடை பகுதியில் அரளிவிதையை சாப்பிட்டார். இதை பார்த்த சக மாணவர்கள், ஆசிரியர் மாடசாமி, பாபுவை ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவனுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், பாபுவின் தந்தை சாமுவேல் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர். அவர்களிடம் மாவட்டகல்வி அலுவலர் முனியசாமி,டவுன் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், தலைமையாசிரியர் கோவிந்தராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்ததால்,சமரசம் ஏற்பட்டது.