உள்ளூர் செய்திகள்

படித்தவுடன் வேலை பெற்றுத்தரும் கடல்சார் படிப்புகள்!

மதுரை: குறைந்த செலவில் படித்தவுடன் வேலை வாய்ப்பு பெற்று தரும் கடல்சார் விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகத்துறை படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம், என, மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியின் அத்துறை தலைவர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு நாளில் கடல்சார் விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம் படிப்புகள் குறித்து அவர் பேசியதாவது: படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் படிப்புகளில் இதுவும் ஒன்று. கப்பல் மற்றும் கடல்சார்ந்த மூன்றாண்டு படிப்பு இது. கப்பல் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிப்பதால் இப்படிப்பிற்கு சிறப்பாக எதிர்காலம் காத்திருக்கிறது. சுற்றுலா பயணிகள் கப்பல்கள், கப்பல் கம்பெனிகள், ஸ்டார் ஓட்டல்கள், ஏர்லைன் மற்றும் ஆர்மி கேன்டீன்கள், கார்ப்பரேட் மருத்துவமனை கேன்டீன்களில் பணிவாய்ப்புகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் கப்பலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எட்டாயிரம் பயணிகள் இருப்பர். அவர்களுக்கு 60க்கும் மேற்பட்ட நாடுகளின் உணவு தயாரித்து விருந்தினரை எப்படி உபசரிப்பது என்பது தான் இப்படிப்பு. பல நாடுகளை சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைக்கும். குறைந்தது ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறலாம். இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றால் ரூ.1.50 லட்சம் வரை சம்பளம் உயரும். இப்படிப்பு 80 சதவீதம் பிராக்டிக்கல் தான். இதனால், சர்வதேச கட்டமைப்பு வசதி, சிறப்பான பயிற்சி அளிக்கும் கல்லுாரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். பாடப்பிரிவுகள் உரிய அங்கீகாரம் பெற்றவையா என உறுதி செய்ய வேண்டும். இப்படிப்புகள் மதுரையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் உள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்