ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேரில் இலவசப் பயிற்சி!
பில்கேட்ஸ் 20 வயதில் விண்டோஸை உருவாக்கினார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த லேரி பேஜ், செர்க்கி பிரின் ஆகியோர் கூகுள் வலைத்தளத்தை உருவாக்கினார்கள். பேஸ்புக், ஆர்குட் போன்று சோசியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள் இளைஞர்களின் வெற்றிகரமான தொழில்நுட்ப படைப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. இதுபோல, இளம் வயதிலேயே தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்தவர்கள் ஏராளம். ஐ.டி., துறையில் தன்னம்பிக்கையோடு புதிய திட்டங்களை உருவாக்கி தங்களைத் தனித்துவ மிக்கவர்களாக நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் நமது இளைஞர்களுக்கு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேரில் இலவசப் பயிற்சி அளிக்க சென்னையைச் சேர்ந்த சிப்கிட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., படித்து வேலை இல்லாத இளைஞர்கள் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேரில் பயிற்சி பெறலாம். வெப் 2.0 தொழில்நுட்பத்தில் பயிற்சி அளித்து, அவர்களே திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் வேலை தேடும் இளைஞர்கள் தாங்களே வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற முடியும் என்கிறார் சிப்கிட்ஸ் மற்றும் டென்த் பிளானெட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குமரன் மணி. தகவல் தொழில்நுட்ப பணிகளில் 15 சதவீதம் அளவுக்கு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்களில் திறமை பெற்றவர்களுக்கு கிடைக்கிறது என்பது தற்போதைய நிலமை. 2012ம் ஆண்டில் 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் துறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இத்துறையில் பயிற்சி பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ள முடியும். முயன்றால் சிறந்த தொழில் முனைவோராகவும் உருவாக முடியும். அதற்காகவே ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேரில் இலவசப் பயிற்சியை இளைய தலைமுறையினருக்கு அளிக்க விரும்புகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் வேறு இடங்களில் பணிகளில் சேர்ந்திருக்கிறார்கள் என்கிறார் குமரன் மணி. விவரங்களுக்கு: www.chipkidz.com 044-42961000