என்.ஐ.டி.,களில் புதுவை மாணவர் இடங்கள் மறுப்பு!
அதற்கு பதிலாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களிலும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் புதுவை மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு காலத்தில் மண்டல பொறியியல் கல்லூரிகளாக இருந்தவை, சிறிது காலத்திற்குமுன் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களாக தரம் உயர்த்தப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் 20 என்.ஐ.டி.,கள் உள்ளன. அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.இ.இ.இ.,) அடிப்படையில் இந்த கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். என்.ஐ.டி., உள்ள மாநிலத்தில் அந்த மாநில மாணவர்களுக்காக 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மீதமுள்ள 50 சதவீத இடங்கள் அகில இந்திய அடிப்படையில் நிரப்பப்படும். என்.ஐ.டி.,கள் இல்லாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு தனியே குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். என்.ஐ.டி.,களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சிலிங்கை நடத்தும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சென்ட்ரல் கவுன்சலிங் போர்டு இணைய தளத்தின் முதல் பக்கத்திலும் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுவரை புதுச்சேரியில் என்.ஐ.டி., தொடங்கப்படவில்லை. அதனால், என்.ஐ.டி., இல்லாத யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் 35 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அந்த இடங்களுக்கு புதுவை மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டில் புதுவைக்கான 35 இடங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் என்.ஐ.டி.களில் இடஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருந்த புதுவை மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். என்.ஐ.டி.,கள் மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் நாட்டின் மிகச் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் என்பது மட்டுமல்ல, அங்கு கட்டணமும் குறைவு. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சுயநிதிக் கல்வி நிறுவனங்களிலும் கட்டணம் மிகவும் அதிகம். இதனால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக புதுவை மாணவர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, ஜூலை 19ம் தேதி நிலவரப்படி, அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான நான்கு கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து விட்டது. என்.ஐ.டி., இல்லாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு என்.ஐ.டி.,களில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து முறையீடு செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், என்.ஐ.டி.,களில் அட்மிஷனை எதிர்ப்பார்த்து ரேங்க் பட்டியலில் உள்ள புதுவை மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். என்.ஐ.டி.,களில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ள புதுவை மாணவர்கள் வேறு கல்வி நிலையங்களில் கிடைத்த இடங்களிலும் சேராமல் விட்டு விட்டனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திரிசங்கு நிலையில் உள்ளனர் அந்த மாணவர்கள். ஏற்கெனவே அறிவித்துள்ளபடி புதுவை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுப்படி என்.ஐ.டி.,களில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதற்கான காரணங்களையும் கவுன்சிலிங்கை நடத்தும் சென்ட்ரல் கவுன்சலிங் போர்டோ அல்லது மத்திய அரசோ விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.