பள்ளிப் பாடப்புத்தங்கள் அச்சிடும் பணி துவக்கம்!
மாநிலம் முழுவதும் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தங்கள், சிவகாசியில் 30 ஆப்செட் அச்சகங்களில் அச்சிடப்பட்டு வந்தன. ஆண்டு தோறும் ஒன்றரை கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டு, வழங்கப்படும். பத்து ஆண்டுகளாக அச்சுக் கூலி உயர்த்தப்படாமல் இருந்தது. 2007-2009ம் ஆண்டில் ஆயிரம் பிரதிகள் அச்சிட ஒரு கலருக்கு 46 ரூபாயும், மல்டி கலருக்கு 53 ரூபாயும் அச்சுக் கூலி வழங்கப்பட்டது. பைண்டிங் கூலியாக ஆயிரம் பிரதிக்கு 27 ரூபாயும், மற்றொரு வகையான பைண்டிங்கிற்கு 27.50 ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 2009 - 2011ம் ஆண்டிற்கான டெண்டர் கோரப்பட்டது. சிவகாசி அச்சகத்தினர் 20 சதவீத கூலி உயர்வு கிடைத்தால் தான், தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு கட்டுபடியாகும் என்ற எண்ணத்தில் டெண்டர் போட்டனர். டெண்டர் கோரியவர்களுடன் பாடநூல் கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கடந்த ஆண்டு வழங்கிய கூலியை விட, ஒரு கலர் பிரின்டுக்கு ரூ. 3.05 குறைத்து, அதாவது ரூ. 42.95க்கு கூலி நிர்ணயம் செய்தது அச்சகத்தினருக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. கூலியை உயர்த்தாவிட்டால், பாட புத்தகங்கள் அச்சிடும் பணி செய்வதில்லை என, அச்சக உரிமையாளர்கள் முடிவு எடுத்தனர். இதனால், பாட புத்தகங்கள் அச்சிடாமல் இருந்தனர். உரிய காலத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க முடியுமா என்ற நிலை உருவானது. இதுகுறித்து, தினமலர் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, சிவகாசி பாடநூல் அச்சிடுவோர் சங்க நிர்வாகிகள், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாடநூல் கழக உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை டெண்டர் கோரப்படும் நடைமுறையை மாற்றி இந்த ஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை டெண்டர் கோரப்படுகிறது. தற்போது, 2009 முதல் 2010 ஜூன் வரை மட்டும் எட்டு மாதங்களுக்கான கூலி உயர்வை பாட நூல் கழகத்தினர் அறிவித்துள்ளனர். ஆயிரம் பிரதிகள் ஒரு கலரில் பிரின்ட் செய்ய ரூ.50.50 காசு, மல்டி கலரில் பிரின்ட் செய்ய ரூ.55, ரூ.27க்கு செய்த பைண்டிங் கூலி ரூ.29 ஆகவும், 27.50 ரூபாய்க்கு செய்த பைண்டிங் கூலி 28.50 ரூபாய் என உயர்த்தினர். மொத்தத்தில் 6.75 சதவீத கூலி உயர்வை அச்சகத்தினர் ஏற்றுக்கொண்டனர். அச்சக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், சூழ்நிலையை அனுசரித்து, அரசு வழங்கிய கூலி உயர்வை ஏற்றுக்கொண்டோம். ஆண்டுக்கு ஒரு முறை டெண்டர் என்பதால் படிப்படியாக கூலியை உயர்த்திப் பெற வாய்ப்பாக இருக்கும். பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணியை துவக்கியுள்ளோம் என்றார்.