சுற்றுப்புறங்களை கூர்ந்து நோக்குங்கள்: மயில்சாமி அறிவுரை
சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லூரியில், 46வது குழந்தைகள் தின விழா நடந்தது. அதில், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:சந்திரயான் செயற்கைக்கோள் நிலவில் இறங்கிய நாள் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி. குழந்தைகள் மனதில் பதியும் வகையில், அந்த நாளில் சந்திரயான் செயற்கைக்கோளை இறக்க திட்டமிட்டோம். அது வெற்றிகரமாக முடிந்தது. தற்போது கண்டறியப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதற்கே மூன்றரை ஆண்டு காலம் பிடிக்கும். நிறைய விஞ்ஞானிகள் வரவேண்டும். அரசுப் பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் சாதனை செய்தால், நிச்சயம் அவர்களுக்கு அங்கீகாரம் உண்டு.70க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் அனுப்பப்பட்ட போதிலும், சந்திரயான் -செயற்கைக்கோள் நிலவுக்கு சென்று அரிய தகவல்களை அளித்தது. ஆம்ஸ்ட்ராங் நிலவின் நீள்வட்டப்பாதையில் கால் பதித்தார். ஆனால், சந்திரயான் நிலவின் துருவப்பகுதியில் மூவர்ணக் கொடியை பதித்ததுடன், நீர், கனிமம், டைட்டானியம் ஆக்சைடு, ஹீலியம் -3 வாயு போன்ற பொருட்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அனைத்து நாடுகளும் நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளன.சந்திரயான் 1, 2 மட்டுமல்ல; 3, 4, 5 என்று தொடரும். ஒவ்வொரு மாணவரும் அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளை உருவாக்க வேண்டும். தங்களது பள்ளி, கல்லூரிகளில் செய்து பார்க்க வேண்டும். அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். உயர்ந்த லட்சியத்தோடு மேன்மேலும் சாதிக்க வேண்டும் என்ற நினைப்போடு படிக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கடந்த 40 ஆண்டுக்கு முன், சந்திரயான் செயற்கைக்கோளை அனுப்பும் பணியில் நான் இருப்பேன் என்று நினைக்கவில்லை. இன்று வெற்றி பெற்று மேடைகளில் ஏறி மாணவர்களுடன் பேசுகிறேன். தங்களது திறமையை கண்டறிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாதிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சந்திரயான் திட்டப்பணியில் 3,000 பேர் ஈடுபட்டனர். அதில், 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் படித்தவர்களே. மாணவர்கள் புத்தக அறிவு மட்டும் இல்லாமல், சுற்றுப்புறங்களையும் கூர்ந்து நோக்க வேண்டும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.